வக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன?
வக்கிரம் என்றால் என்ன?
பொதுவாக ஒருவரை “வக்ர புத்தி” உள்ளவன் என்று நாம் சொன்னோம் ஆனால் அவன் மற்ற மனிதர்களை போல அல்லாமல் ஒரு விபரீத புக்தியை உடையவனாக இருந்து அடுத்தவர்களுக்கு தொல்லைகளை தருபவனாக பார்க்கிறோம்.
கிரகங்கள் ஒவ்வொன்றும் ஆட்சி, உச்சம்,மூலத்திரிகோணம், நீசம், நட்பு, பகை போன்ற நிலைகளை அடைவதோடு மட்டும் அல்லாமல் வக்ரம், வக்ர நிவர்த்தி, அஸ்தமனம், கிரகணம், அதிசாரம் போன்ற நிலைகளையும் சேர்த்தே பெருகிறது.இதில் வக்ரம் பெற்ற கிரகங்கள் என்ன பலனை செய்யும் என்பதை கணிப்பதில் ஜோதிடர்களுக்கு இந்த வக்ர கிரகங்கள் பெறும் சவாலாகவே இருக்கிறது.
வக்ரம் எனப்படுவது நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு கிரகம் பின்னோக்கி வருவதைப்போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட டிகிரிக்கு மேல் சூரியனை விட்டு விலக முடியாது.
அவ்வாறு அந்த கிரகம் சூரியனை விட்டு உச்ச பட்ச விலகலை அடையும் போது அந்த கிரகம் வக்ரம் அடைகிறது. இது ஒரு பொய் தோற்றம் ஆகும்.
சூரியனுக்கு வக்ர நிலை கிடையாது. சந்திரனுக்கும் வக்ர நிலை கிடையாது. அதேபோல இருள் கிரகங்களான ராகு, மற்றும் கேதுக்களுக்கும் வக்ர நிலை கிடையாது.
ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் அவைகளுக்கு வக்ரம் இல்லை.
சூரியனுக்கு வக்ர நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்த்தோமானால் எல்லா கிரகங்களும் பின்னோக்கி சுற்ற உலக அழிவுதான் நிகழும். அதுமட்டுமல்லாமல் சூரியனுக்கு சஞ்சார நிலை என்பது கிடையாது. அவர் தன்னைப் தானே ஒரே அச்சில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இன்னொரு ஒளிக்கிரகமான ஒரே ஒரு வீட்டுக்கு ஆதிபத்தியம் பெறும் சந்திரனுக்கும் வக்ரம் இல்லை. சந்திரன் மாதத்தில் 15 தினங்கள் சூரியனால் பலவீனத்தை அடையும் அதே வேளையில் சந்திரனை வைத்தே ராசி கணிக்கப்படுகிறது. சந்திரனை வைத்தே நட்சத்திரம், திதி கணிக்கப்படுகிறது. சந்திரனை வைத்தே தசாபுத்தி கணிக்கப்படுகிறது. அந்த அளவில் சந்திரன் 12 ராசிகளையும் 27 நாட்களில் நேர் கதியில் சுற்றிவர வேண்டும் என்பது காலதேவனின் கட்டளை ஆகும்.
மீதமுள்ள செவ்வாய், சனி, சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகங்களுக்கு வக்ர நிலை ஏற்படுகிறது. கிரகங்களின் வக்ரத்தை சுப கிரகங்களின் வக்ரம், பாவ கிரகங்கள் வக்ரம் என்று இரண்டு வகைகளாக பிரித்து பலன் சொல்ல வேண்டும். அதேபோல லக்ன சுபர்களின் வக்ரம், லக்ன பாவர்களின் வக்ரம் என்றும் இரண்டாக பிரித்தும் பலன் சொல்ல வேண்டும்.
சுபக்கிரகங்கள் குருவும் புதனும் கேந்திரங்களில் கேந்திராதிபத்திய தோஷத்தை அடைவார்கள் என்பதால் இந்த இடங்களில் குரு பகவானும் புதன் பகவானும் வக்ரம் அடையும்போது தங்களுடைய கேந்திராதிபத்திய தோஷத்தை செய்ய மாட்டார்கள்.
ஒரு கிரகம் பாதகாதிபதி தோசத்தை அடையும்போது அந்த பாதகஸ்தானத்தில் அந்த கிரகம் வக்ரம் அடையும்போது பாதகாதிபதி தோசத்தை செய்யாது.
பொதுவாக சுபகிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் திரிகோணங்கள் என்று சொல்லப்படக்கூடிய 1, 5, 9 போன்ற இடங்களில் 2, 11 போன்ற இடங்களில் அமர்ந்து வக்ரம் பெறும்போது தன்னுடைய காரகத்துவத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் தனது ஆதிபத்திய வீட்டின் பலன் களிலும் முரண்பாடுகளை ஏற்படுத்தி தான் இருக்கும் வீட்டின் பலனையும் கெடுத்து விடுகிறார்கள்.
சுபக்கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதி ஆகி 3, 6, 8, 12ல் அமர்ந்து வக்ரம் பெறும்போது 5, 9 போன்ற திரிகோண ஸ்தானங்கள் மேலும் பலவீனம் அடைந்து மேலும் கெடுபலன்கள் ஏற்படுகிறது.
சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் எந்த வீட்டுக்கு அதிபதியாக வந்தாலும், இவர்கள் 3, 6, 10, 11 போன்ற இடங்களில் வக்ரம் பெறுவது நல்ல மிகச்சிறந்த அமைப்பாகும். இவர்கள் வாழ்க்கையில் உயர்வுகளை பெற்று விடுகிறார்கள்.
ஒரு ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்று, செவ்வாய் வக்ரம் பெற்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விடக்கூடாது. விபரீதம் ஏற்படும்.
இந்திராகாந்தி அம்மையாரின் ஜாதகத்தில் சனி வக்ரம், புதன் வக்ரம், குரு வக்ரம் அதாவது கடக லக்னத்திற்கு 6, 8, 12 ம் அதிபதிகள் வக்ரம் பெற்று ராஜயோகத்தை தந்தாலும் இந்த 6, 8, 12 ம் அதிபதிகள் தரக்கூடிய ராஜயோகமானது நீடித்து நிலைத்து நிற்பதில்லை. முதலில் பேரும் புகழும் தந்து, ராஜயோகத்தை தந்து முடிவில் மரணத்தையும் தந்தது.
இதுவே குரு, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள்,லக்ன யோகர்கள் வக்ரம் பெற்றால் ஆரம்ப காலத்தில் ரொம்பவும் சோதனைகளை தந்து, ரொம்பவும் கஷ்டப்பட்டு முடிவில் யோகத்தையும், உன்னத வாழ்க்கையை தருவதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்..
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம்,
இந்த லக்னங்களுக்கு குருவின் வக்ரம் நல்ல பலன்களை தருகிறது.
பொதுவாக கடகம், சிம்மம், மேசம் விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு
சனியின் வக்ரம் நல்ல பலன்களை தருகிறது.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம், போன்ற லக்னங்களுக்கு செவ்வாயின் வக்ரம் நல்ல பலன்களை தருகிறது.
குரு பகவான், சூரியனுக்கு 6, 8 ல் இருந்து வக்ரம் பெற்று 5, 9 போன்ற திரிகோணங்கள் பலவீனமாக இருக்கும் ஜாதகன்
நாத்திக வாதியாக இருப்பான்.
முறைகேடான வருமானம் மற்றும் மதத்தின் பெயரால் ஊரை ஏமாற்றி பொருள் சேர்ப்பவனாகவும், தான் பெற்ற பிள்ளைகள் மூலம் கஷ்டத்தை அடைபவனாக இருக்கிறான்.
உச்ச வக்ரம் நீசபலனை தரும்.நீச வக்ரம் உச்ச பலனை தரும்.எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு குரு உச்ச வக்ரம் பெற்று அதற்கு ஏழில் ராகு, சனி அமர்ந்து குரு பகவான் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் புத்திரதோசத்தால் திருமணம் தாமதமாகிறது.
இன்னொரு ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி குரு உச்ச வக்ரம் பெற்று
தனது ஐந்தாம் வீடான மீனத்தை தன் வீட்டை தானே பார்த்த காரணத்தினால் புத்திர பாக்கியம் கிடைக்க பெற்றாலும் குடும்பத்தில் வம்பு வழக்குகள் இருக்கவே செய்கிறது.
ஒரு ஜாதகத்தில் அட்டமாதிபதி ,அஷ்டம ஸ்தானங்கள் வலுவிழந்து சனி வக்ரம் பெற்று எட்டில் இருந்தாலோ, எட்டை பார்த்தாலோ அவருக்கு ஆயுள் பங்கத்தையும் ஏற்படுத்துவதை பார்க்க முடிகிறது.
பொதுவாக நம் முன்னோர்கள் இந்த வக்ரத்தை பற்றி லேசாக தொட்டு சென்று விட்டனர். நாம் தான் நம்முடைய அனுபவத்தைக் கொண்டு மேலும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment